Featured

அப்பாவின் புல்லட் வண்டி

இன்று வீதிக்கு ரெண்டு ராயல் என்பீல்ட் வண்டி இருப்பது போல அல்ல அன்று. 80களிலும் , 90களிலும் புல்லட் வண்டி என்பது அரிது மற்றும் ஒரு தனி அடையாளமும் கூட. தற்கால சொல்லாடடில் சொல்ல போனால் “ராயல் என்பீல்ட் இஸ் எ நேம், புல்லட் இஸ் ஆன் எமோஷன்” என்றே சொல்லலாம். இன்றும் சினிமாக்களில் ஒரு மிராசையோ, மைனரையோ காட்டினால், ஒரு புல்லட் வண்டியில், கைப்பிடிகளின் இருபுறமும் ரிப்பன்கள் கட்டி, கலர் சட்டை அணிந்து, கருப்புக் கண்ணாடி போட்டு ரோட்டில் மெதுவாகப் பவனி வருவது போல் காட்டுவது வழக்கம். ஏனெனில் அந்த வண்டிகளில் வேகமோ, வளைந்து நெளிந்து வரும் லாவகமோ இல்லை. படைவீரர்கள் பாய்ந்து வரும் குதிரைகள் போலல்ல புல்லட்டுகள், அரசர்கள் அம்பாரியோடு அமர்ந்து வரும் யானைகள் அவை.

என் அப்பா எந்த விதத்திலும் ஆஜானுபாகுவான மனிதர் இல்லை. சராசரி உயரம், மெல்லிய தோற்றம். கைகளை மட்டும் தண்டால் எடுத்து புஷ்டியாக வைத்திருப்பார். குரலும் சிம்மகர்ஜனை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. மிட்டா மிராசும் இல்லை, ஜமீன்தாரும் இல்லை. ஆனால் அந்த புல்லட்டில் அமர்ந்து, சைடு ஸ்டாண்டை எடுத்து ஒரு உதை உதைத்து ஸ்டார்ட் பண்ண பின்பு வேறு மனிதர் ஆகிவிடுவார். அதிலும் சில நாட்கள் சபாரி உடை அணிந்து சென்றால் ஏதோ கருப்பு பூனை படையில் இருப்பது போன்ற தோரணை சேர்ந்து விடும். புல்லட் வண்டிகளின் தோற்றத்தை விட அதி முக்கியமான ஒரு அம்சம் உண்டு. அது தான் அவை போடும் சத்தம். டுபு டுபு டுபு என்று அப்பாவின் வண்டி தெருமுனையில் வரும்போதே வீட்டில் சத்தம் கேட்டு விடும். அரக்கப் பறக்க அவரை பார்க்க ஆவலாய் வாசலுக்கு ஓடுவேன். என்னைத் தூக்கி வண்டியின் முன்பகுதியில் பெட்ரோல் டேங்க் மீது உட்கார வைத்து ஒரு ரவுண்டு கூட்டிட்டு போவார். அப்பாவின் கைமேலே நானும் பிடித்துக்கொண்டு ஏதோ நானே புல்லட் ஓட்டுவது போல் பாவனை செய்து போவேன் . 

ஆரம்ப பள்ளிக்குச் செல்லும் போது பெரும்பாலும் என்னை அப்பா தான் கூட்டிக்கொண்டு விடுவார். வழக்கம் போல என்னை முன்னாடி உட்காரவைத்து பள்ளி போகும் வழியில் பேசிக்கொண்டே போவோம். முக்கியமாக எனக்கு அந்த நேரத்தில் திருக்குறள் சொல்லிக்கொடுத்துக் கூட்டிட்டு போவார். தமிழ் பாடத்தில் வருவதற்கு முன்னரே நிறைய குறள்கள் அப்பாவின் புல்லட்டில் தான் நான் கற்றுக்கொண்டேன். சிறு வயது முதலே எனக்குத் தமிழ் ஆர்வம் வந்ததற்கு அப்பாவும் புல்லட்டும் மிக முக்கிய காரணிகள். அது மட்டுமின்றி பள்ளிக்கு நண்பர்கள் மத்தியில் பந்தாவாக புல்லட்டில் அப்பாவுடன் வந்து இறங்குவது ஒரு தனி குஷி தான். வீட்டில் ஸ்டாண்ட் போட்டு வண்டி நிற்கும் பொழுது, கால் எட்டாத போதும் டுர் டுர் என வாயிலே சத்தம் போட்டு ஹேண்டில்பாரை அங்கும் அங்கும் திருப்பி விளையாடுவேன். பொம்மைகள் வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் தங்கையையும் வலுக்கட்டாயமாகக் கூட்டிக் கொண்டு வண்டியில் வைத்து ‘ரவுண்டு’ கூட்டிட்டு போவதாக சொல்லுவேன்.

ஒருவர் தனது வண்டியின் மேல் வைத்துள்ள பற்றை ஓட்டுவதில் மட்டும் உணர்ந்துவிட முடியாது. அவர்கள் வண்டியை பராமரிக்கும் முறையில் தான் அது வெகுவாக தெரியும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு சின்ன முக்காலியையும், பக்கெட் தண்ணியையும் எடுத்துக்கொண்டு வண்டி அருகே அமர்ந்து விடுவார் அப்பா. அதைத் தேய்த்துத் துடைத்து பளபளவென வைத்துக்கொள்வார். “நாளப்பின்ன உனக்கும் நல்ல வண்டி வேணும்னா நீயும் வந்து உன் சைக்கிள துடை” என்பார். நானோ ஆயுத பூஜைக்கு மட்டுமே வண்டியை அதுவும் வேண்டாவெறுப்பாய் துடைக்கும் கேஸ். துடைப்பது மட்டுமின்றி அதனை அவ்வப்போது செப்பனிட்டு வைப்பது ஒரு பெரிய போராட்டம். “மெக்கானிக் பூரா திருட்டு பயலா இருக்கானுங்க. போன தடவ வண்டிய விட்டுட்டு வந்தேன், நாசமாக்கி வெச்சிருக்கான்” என அடிக்கடி புலம்பி ஏழெட்டு மெக்கானிக் மாற்றுவார். 

அப்பாவின் புல்லட் பந்தம் அவர் வேலை நிமித்தமாக சில வருடங்கள் வங்கியின் கிராம கிளைக்கு மேலாளராக  சென்றபோதும் விடவில்லை. அங்கே அவர் பயன்படுத்த ஒரு பழைய புல்லட் வண்டி கொடுத்தார்கள். கிராமத்தில் சின்ராசு கணக்காக அதனை ஓட்டிக்கொண்டு திரிந்திருந்தார். வீட்டில் இருந்த அவரது வண்டியை பல வருடம் கழித்து விற்க நேர்ந்தது. அதனை விற்ற பின்பும் அதே போல ஒரு வாட்ட சாட்டமான பெரிய வண்டியை தான் வாங்கினார் அப்பா. நான் வாங்கிய முதல் வண்டியிலிருந்து, இன்று பயன்படுத்தும் கார் வரையிலும் அப்பாவின் புல்லட்டின் சாயல் கண்டிப்பாக இருக்கும்.  வெளிநாட்டில் இன்றும் ரோட்டில் டுபு டுபு என்று ஹார்லீ டேவிட்சன் வண்டியில் நீண்ட வெள்ளை தாடி வைத்து பைக்கர் கேங்க் ஆட்கள் யாரேனும் சென்றால், எனக்கு முதலில் நினைவிற்கு வருவது திருவள்ளுவர் தான். தாடியினால் அல்ல, என் டாடியினால்.

Featured

கார்குழலி

10 மணி ஆனதை பாட்டாவே படித்தது என் கடிகாரம். வழக்கம் போல இன்னிக்கும் ஆபீசுக்கு லேட்டு. வீட்ல எல்லாரும் வேலைக்கு கெளம்பியாச்சு. அவசர அவசரமா அப்பா அயன் பண்ணி வெச்ச சட்டையை போட்டுட்டு தலையை வாரும்போது கண்ணாடியில் பாத்தா, மெத்தை மேல ஒரு லெட்டர். வெள்ளை கவரில் ஊதா நிற ஸ்கெட்ச் பேனாவில் என் பெயர் எழுதி இருந்தது. இத யாரு இங்க வெச்சிருப்பா , ஒரு வேள மளிகை லிஸ்ட் தர சொல்லி அம்மா வெச்சிருப்பாங்களோ என்று எண்ணிக்கொண்டே திறந்தேன். ஒரு கசங்கி போன காகிதம், அதில் ஒரு பெண்ணின் போட்டோ! போட்டோனா நல்லா மேக்கப்பெல்லாம் போட்டு ஸ்டைலா போஸ் குடுத்து பில்டர் போட்டு எடுத்தது இல்ல. செயற்கையான ஒரு சிரிப்புடன், ஒரு சிகப்பு நிற டிஷர்ட் அணிந்திருந்தாள். தூக்கி கட்டிய கொண்டை மற்றும் கையில் கரண்டி? ஒப்பனை எதுவும் இல்லாவிட்டாலும் அந்த முகம் அவ்வளவு அழகு. அந்த மையிட்ட கண்களை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஆயினும் எனக்கு ஒரே குழப்பம். கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கறாங்களா வீட்ல? இல்லையே, போன வாரம் தானே “உனக்கெல்லாம் எவன்டா பொண்ணு குடுப்பான்” ன்னு அம்மா அப்பா தங்கச்சி உட்பட மூணு பேரும் ரவுண்டு கட்டி கலாய்ச்சாங்க. அப்படியே பொண்ணு பாக்கறதா இருந்தாலும் இந்த மாறி போட்டோவையா அனுப்புவாங்க ? போட்டோ அடியில் என்னை போலவே கோழி கிறுக்கல் கையெழுத்தில் “தெரேசா ஹாஸ்பிடல், நங்கநல்லூர்” என எழுதி இருந்தது. கூடவே ஒரு பெயர், கார்குழலி.

எதுக்கும் சந்தேகத்தை போக்கிவிட குடும்ப வாட்ஸாப்ப் குரூப்பில் ஒரு மெசேஜ் தட்டி விட்டேன். யாரும் என் அறையில் எந்த லெட்டரும் வைக்கவில்லை போல. இது எப்படி இங்கே வந்தது என்ற குழப்பத்துடன் ஆபீஸ் டீம் லீடுக்கு ஒரு போன் செய்தேன். “இன்னிக்கு ஒரு 1 ஹவர் லேட்டா வருவேன் ஜி” என்றேன். “மணி 10:10, அப்படியே நீ 1 மணி நேரம் லெட்டுன்னா கூட 10 நிமிஷம் முன்னாடி வந்திருக்கணும் டா” என்றார். வழக்கம் போல சிரித்து மழுப்பி போனை துண்டித்து அவசரமாக வண்டியை எடுத்து நங்கநல்லூர் விரைந்தேன். ஒரு வேளை நண்பர்கள் செய்யும் பிராங்க் ஆகா இருக்குமோ? இல்ல தங்கச்சி பிரென்டா இருக்குமோ? நம்ம தங்கச்சிக்கு இவ்ளோ சூப்பர் பிரெண்டெல்லாம் இல்லையே என்று யோசித்துக்கொண்டே ஹாஸ்பிடல் வந்தடைந்தேன். ரிசெப்ஷன் மேஜைக்கு சென்று ‘கார்குழலி‘ என்றேன். “டாக்டர் கார்குழலியை பாக்கணுமா? அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா ?” என்று பதில் வந்தது. “அதெல்லாம் இல்லையே. அவங்க ஷிப்ட் எப்போ முடியும்” என்று கேட்டேன். “1 மணிக்கு” என்றார். “ஓகே தேங்க்ஸ்” என்று சொன்ன கையோடு லீடுக்கு ஒரு “ஆஸ் ஐ அம் சபரிங் பிரம் பீவர்” மெசேஜ் தட்டி விட்டேன். காத்திருக்கும் நேரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அத்தனையும் அலசினேன் அவள் விவரம் தேடி. ரோஜா பூக்களும் , நாய் குட்டிகளும் தவிர வேற எந்த புகைப்படமும் இல்லை. ஒரு வழியாக ஒரு யுகம் கழிந்து ஒரு மணி ஆனது. கைப்பையில் ஸ்டெத்தை அடைத்தபடியே வெளியில் வந்தாள் கார்குழலி!

அவளை பார்த்த முதல் கணமே என் கண்ணில் பட்டது அவள் இடுப்பளவு கூந்தல். அவள் பெற்றோர் மீது எனக்கு தனி மரியாதை வந்தது. பெரும் தீர்க்கதரிசிகள். பிறந்த பொழுதே இப்படி ஒரு பெயரை கச்சிதமாக வைத்திருக்கிறார்கள்! போட்டோவில் இருப்பதை விட நேரில் அவ்வளவு அழகாக இருந்தாள். சொல்ல போனால் நேரில் சில வருடங்கள் இளமையாக, சிக்கென்று தெரிந்தாள். அய்யய்யோ ஒரு வேளை இது வேற பொண்ணா இருக்குமோ, இல்ல அவளோட தங்கச்சி ஏதாச்சும் என்ற குழப்பத்தோடு அருகில் சென்று “கார்குழலி” என்றேன். “ஆமாம் நீங்க?” என்றாள். என் பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டு “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றேன். “என்ன விஷயமா?” என்றாள். “முக்கியமான விஷயம்” என்று சொல்லி அந்த போட்டோவை நீட்டினேன். என்னைப்போலவே அவளுக்கும் ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. “இது… இதுல இருக்கறது… என்ன மாறியே” என்று குழம்ப ஆரம்பித்தாள். “மார்பிங் பண்ணி விளையாடறீங்களா?” என்றாள் கோபமாக. அதற்க்கு அவளே “இல்லையே இந்த மாறி போட்டோவே நான் எடுத்ததில்லையே” என்று முணுமுணுத்தாள். “இது உங்களுக்கு எப்படி கெடச்சுது” என்றாள். நடந்த விஷயங்களை சொல்லி, நானும் அதே குழப்பத்தில் இருப்பதாக சொன்னேன். இதை பற்றி ஆராய அடுத்த ஓரிரு நாட்கள் கூடினோம். அதன் பின் பேச நிறைய விஷயங்கள் இருந்ததால் இந்த புகைப்படம் தேவைப்படவில்லை. ‘நீங்க, வாங்க‘ என்பது ‘நீ,வா‘ ஆனது பின் ‘டா,டி‘ ஆனது. ‘செல்லம், பேபி’ ஆக இரண்டு வருடங்கள் ஆனது. அதன் பின் வீட்டில் கூறி திருமணம் செய்து கொண்டோம்.

ஆரம்பத்தில் அவ்வப்போது அந்த மர்ம போட்டோவை பற்றி பேச்சு வந்தாலும், திருமணம் ஆனா சில வருடங்களில் அதெல்லாம் சுத்தமாக மறந்து போய்விட்டது. வாழ்க்கை ஜெட் வேகத்தில் மிகவும் சந்தோஷமாக போய் கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்ல சிக்கன் பிரியாணி. நான் ஹாலில் செய்திகள் பார்த்தபடியே அவளுக்கு வெங்காயம் வெட்டி கொண்டிருந்தேன். “இதுக்கு நானே இந்நேரம் வெட்டி செஞ்சு முடிச்சிருப்பேன்” என்று புலம்பிக்கொண்டே வந்தாள் . “நீள நீளமா வெட்டினாதான் டேஸ்டு நல்லா இருக்கும். கொஞ்சம் பொறுமை” என்று அவளை பார்த்தேன். புதியதாக ஒரு சிகப்பு டீஷிர்ட் அணிந்திருந்தாள். “இது எப்போ வாங்கினது?, நல்லா இருக்கே” என்றதற்கு, “அம்மா வீட்டுக்கு போயிருந்தேன்ல, அப்பா வாங்கி வெச்சிருந்தாரு. சூப்பரா இருக்குல்ல? நீயும் தான் டிரஸ் எடுத்து தரியே தொள தொளன்னு ” என்றாள். அதை எங்கோ பார்த்த ஞாபகத்தில் இருந்த பொழுது வீட்டின் வெளியே ‘க்ளாங்‘ என்ற சத்தம். கதவை திறந்து பார்த்தால் யாருமில்லை. வாசலில் ஒரு பேக்கேஜ் இருந்தது. முகவரி இல்லை. என் பெயர் மட்டும் மேலே எழுதப்பட்டிருந்தது. அதை கொண்டு வந்து என் அறையில் உள்ள மேஜை மேலே வைத்து திறந்து பார்த்தேன். ஒரு விசித்திரமான கருவி போல் இருந்தது. கூடவே ஒரு கடிதம். அதில் அதே கோழி கிறுக்கல் கையெழுத்தில் “டைமர் 0 விற்கு வரும்வரை காத்திருக்கவும். க்ளாங் என்று சத்தம் வரும். ஒரு முறை பயன் பாடு மட்டுமே. சொதப்பி விடாதே“. என்று எழுதி இருந்தது. கடையில் எடை பார்க்கின்ற டிஜிட்டல் மெஷின் போல இருந்தது. ஒரு பெரிய டிஸ்ப்லே ஆனால் அதில் ஒன்றும் இல்லை. அதன் அருகில் ஒரு சிகப்பு பட்டன். அவ்வளவு தான். என்ன ஏதென்று புரியாமல் அந்த பட்டனை அழுத்தினேன். திடீரென எழுத்துகள் தோன்றின. ஒரு ஐந்து நிமிட கவுண்ட்டவுன் ஓட ஆரம்பித்தது. அதன் அருகே இரண்டு கோடிட்ட இடங்கள் தோன்றின. ‘தேதி’ மற்றும் ‘இடம்’.

இதெல்லாம் என்னவென்று புரிவதற்குள் 5 நிமிடம் , 3:50 ஆக குறைந்து விட்டது. “குழலி! நம்ம முதல் முதலா சந்திச்ச தேதி உனக்கு நினைவிருக்கா” என்று கத்தினேன். “ஏன் உனக்கு இல்லையா?” என்ற எதிர்பார்த்த பதில் வந்தது. “அதெல்லாம் இருக்கு மா. சும்மா டெஸ்ட் பண்ணேன். மார்ச் 23 தானே” என்றேன் 23/03/2015 என்ற தேதியை அதில் என்டர் செய்தபடி. “அதானே பாத்தேன்! எங்க நீ கரெக்டா சொல்லிடுவியோன்னு. மார்ச் இல்ல, பிப்ரவரி டா” என்றாள். நல்ல வேளை கேட்டோம்ன்னு நினைத்து சரியான தேதியை மாற்றினேன். கூகிள் மேப்ஸ் உதவியோடு நான் அப்பொழுது இருந்த வீட்டின் லேட்டிடியூட்/லாங்கிடியூட் முகவரியை எடுத்து அதில் என்டர் செய்தேன். நேரம் 2:40 என குறைத்திருந்தது. ஐயோ முக்கியமான விஷயத்தை விட்டோமே ன்னு சமையலறைக்கு ஓடினேன். “இந்த டிரஸ்ல சூப்பரா இருக்க, ஒரு போஸ் குடேன்” என்றேன். “சமைக்கும் போது தொந்தரவு பண்ணாத. பிரியாணி வேணுமா வேணாமா” என்றாள். “ஒரே ஒரு போட்டோ ப்ளீஸ்” என்றதற்கு ஈ என்று பல்லை காட்டி வேண்டா வெறுப்புடன் கரண்டியுடன் ஒரு போஸ் கொடுத்தாள். அந்த போட்டோவை பார்த்தவுடன் என் கண்ணை என்னாலே நம்ப முடியவில்லை. பல வருடங்களுக்கு முன் எனக்கு கிடைத்த அதே புகைப்படம்! அவசரமாக கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்து அதை பிரிண்ட் செய்தேன். “குழலி, உன் கூட தெரேசாவுல வேல செஞ்சாலே உன் பிரெண்டு. அவ பெரு என்ன? ஜெஸ்ஸியா ?” என்று கேட்டேன். “பிளெஸ்ஸி, எதுக்கு கேக்கற” என்றாள். “அவ சமீபத்து போட்டோ ஏதாது வெச்சிருக்க?” என்றேன் பிரிண்ட் வந்து கொண்டிருக்கும் நேரத்த்தில். “டேய் ரொம்ப வழியாத, அவளுக்கு இப்போ ரெண்டு பசங்க” என்றாள். நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல, இருக்குற பொழப்ப பாப்போம் என்று எண்ணிக்கொண்டே பார்த்தால் இன்னும் 30 வினாடிகள் தான் இருந்தது! இந்த வீட்டில் ஒரு பேனா கூட தேவைப்படும் போது கிடைக்காது என்று புலம்பிக்கொண்டே கிடைத்த ஒரு ஸ்கெட்ச் பேனாவால் அவள் புகைப்படத்தில் விரைவாக எழுதினேன். “தெரேசா ஹாஸ்பிடல், நங்கநல்லூர்” “கார்குழலி” என்று. மடித்து ஒரு கவரில் போட்டு என் பெயர் எழுதி அந்த கருவி மேலே வைத்தேன். நேரம் சரியாக 2..1…0 வை எட்டியது.

“க்ளாங்”